அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – வல்லுநர் குழு அறிக்கையை பரிசீலித்து விரைவில் முடிவு: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

இதையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிறீதர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டது. அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை எழுத்து பூர்வமாகவும் குழுவினரிடம் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து குழு தனது அறிக்கையை கடந்த ஆட்சியின் போதே சமர்ப்பித்துவிட்டது. அதன்மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தமிழக அரசின் சார்பு செயலாளர் தே.கோபாலகிருஷ்ணன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

“தங்களுடைய கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இத்துறை சார்ந்தது என்பதால் அதுதொடர்பாக கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதி அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அந்த பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து உரிய முடிவை மேற்கொண்டு அதனடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும்” இவ்வாறு அரசு சார்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், அரசுஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தது.

அதையடுத்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். எனவே, வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.