ஆபத்தான படிக்கட்டு பயணத்தால் கால் இடறி கீழே விழுந்த மாணவர்களுக்கு காயம்

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப்பகுதியான புளியரை பகுதியில் இருந்து பல மாணவ மாணவிகள் கல்லூரி மற்றும் பள்ளிக்கல்விக்காக தென்காசி செங்கோட்டை செல்வது வழக்கம். அடிக்கடி பேருந்துகள் இருக்கும்போதும்கூட, த்ரில்லுக்காக பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணிப்பதை சில மாணவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படியான சம்பவம் இன்றும் நடந்திருக்கிறது. அப்படி படிக்கட்டில் பயணித்த மாணவர்களில் ஒருவர் படியிலிருந்து தவறி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை புளியரையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற 31 ம் எண்ணை சேர்ந்த TN 72 N 1570 என்ற பேருந்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நிறைய பேர் பயணித்துள்ளனர். பேருந்தின் நடுப்பகுதியில் இடம் இருந்தபோதிலும்கூட, மாணவர்கள் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளனர். இதனால் பேருந்து ஒருபக்கமாக சாய்ந்தபடியே சென்றுள்ளது. அப்படி செல்கையில் பேருந்து செங்கோட்டை கட்டளை குடியிருப்பு ப்ரைவேட் மில் நிறுத்தம் அருகே சென்ற போது, படிக்கட்டில் சாகசம் செய்த மாணவர்கள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாக கால் இடறி கீழே விழுந்தனர்.

விழுந்த மாணவர்கள் சாலை ஓரத்தில் உருண்டதால் பின்னால் வரும் வாகனத்தில் சிக்காமல் தப்பினர். இருப்பினும் லேசான அடிபட்டது அவர்களுக்கு. பேருந்தில் இருந்தவர்கள் சுதாரித்து ஓட்டுநர், நடத்துநரிடம் விஷயத்தை தெரிவித்து வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுள்ளனர். போலவே பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அனைவரும் இணைந்து காயம்பட்ட மாணவர்கள் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில் ஒரு மாணவர் ஐடிஐ படிக்கும் மாணவர் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர் செங்கோட்டையில் லேசான காயத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மற்றொரு மாணவர் பற்றிய விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இப்பகுதியில் பேருந்து இயக்கம் அதிகமிருந்தும், மாணவர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுவதால் பெற்றோர் மற்றும் பள்ளி பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– சு.சுந்தரமகேஷ்
சமீபத்திய செய்தி: வன்முறைக்கு வித்திட்ட வாட்ஸ்ஆப் பதிவு – 40 பேர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.