மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஊர்வலத்தின் போது கூட்டத்திற்குள் சிக்கிய ஆம்புலன்சுக்கு, அழகர் திரும்பி சென்று வழிவிட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.
வெகு சில இடங்களில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்து சுற்றி போகச்சொல்வோர் மத்தியில், கள்ளழகரை காண திரண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்த ஆம்புலன்சுக்கு பல்லக்கில் வந்த அழகரே வழிவிட்ட காட்சி வெளியாகி உள்ளது
அழகரை காண ஆவலுடன் சாலையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்து சைரன் சத்தத்துடன் நின்றது பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு பக்தர்கள் வழிவிட்டனர்.
அதற்குள்ளாக அழகர் பல்லாக்கு சாலையை கடந்த நிலையில், ஆம்புலன்ஸுக்காக அழகரின் பல்லாக்கு திரும்பி பழைய இடத்திற்கு வந்து நிற்க , மனிதாபிமானமும், மனித நேயமுமிக்க பக்தர்கள் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்
இதனையடுத்து அங்கிருந்து ஆம்புலண்ஸ் தடையின்றி சென்றதும், அழகர் வலம் வர புறப்பட்டார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ காட்சியை மதுரையின் மனித நேயம் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.