ஏப்ரல் 14, வியாழன் அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது இல்லத்தில் அளிக்கும் ‘தேநீர் விருந்து நிகழ்ச்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிகே மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஏற்பாடு செய்தார். அன்றைய தினம் ஆளுநர் மாளிகையில், கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சிலை திறப்பு விழாவும் நடைபெற இருந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாத ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது.
மேலும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ(எம்) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
இதனிடையே, தமிழ் புத்தாண்டு அன்று’ ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாக கட்சியின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பாரதியார் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது பேசிய ஸ்டாலின்’ ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவு’ கடந்த 210 நாட்களாக கிண்டு ஆளுநர் மாளிகையில் முடங்கி கிடக்கிறது.
நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமுன் வடிவு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடைக்கிறது. அப்படிபட்ட வேளையில், அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்க கூடிய தேநீர் விருந்து விழாவில் கலந்து கொள்வது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாக அமைவதாலேயே அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ஆளுநர் அவர்களுக்கு நானே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.
ஆளுநருடன் எங்களுக்கு எந்தவித தனிப்பட்ட விரோதமும் இல்லை. தனிப்பட முறையில்’ ஆளுநருக்கும், தமிழ்நாடு முதல்வரான எனக்கும் சுமுகமான உறவே இருக்கிறது. ஆளுநர் பழகுவதற்கு அதிகம் இனிமையானவர். எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார். ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்குறிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்.
இது அரசியல் நிலைகளை கலந்த பண்பாடு. இந்த பண்பாடு எந்த நிலையிலும் காப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டுகளை விட, தமிழ்நாட்டுக்கு கிடைக்க கூடிய நன்மையும், பலனுமே முக்கியமானது.
இந்த சட்டமன்றத்தின் மாண்பை, தமிழக மக்களின் உணர்வை மதித்து’ நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானதல்ல. இந்த சபையின் மாண்புக்கு விரோதமானதாகும். ஆளுநர் அனுப்பி வைக்காமல் இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்.
நான் கடந்த 50 ஆண்டுகால பொதுவாழ்வில் எத்தனையோ வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் எனக்கு பொருட்டு அல்ல. இந்த 50 ஆண்டுகால பொதுவாழ்வில் நான் கற்றது எல்லாம்’ என் கடன் பணி செய்து கிடப்பது என்று செயல்படுவதுதான்.
தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய வலி, அவமானங்களை பொறுத்துக் கொண்டு’ அதனால் தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமென்றால், புகழ்ச்சிகளையும், பாராட்டுகளையும் நான் புறந்தள்ளிவிட்டு’ அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொள்ளவே நான் எப்போதும் தயாராக இருப்பேன்.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்க கூடிய நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம். அதற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக முதல்வராக நூற்றாண்டு கண்ட சட்டமன்றத்தின் மாண்பை காக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என்று புரிந்து கொண்டதால் தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை, இந்த சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் 8.2.2022 அன்று நிறைவேற்றி’ மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை குடியரத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, தேவைப்பட்டால்’ அனைத்து கட்சி சட்டமன்றம் கூட்டத்தை கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Video courtesy: Thanthi TV
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“