டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவை அவமானப்படுத்துவதா? என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். மேலும் அவரது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதேநேரத்தில் தமிழக பா.ஜ.,வினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இசையின் மாஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதுதான் ஜனநாயகமா? என கேள்வி எழுப்பிய ஜே.பி.நட்டா, இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதனை விமர்சிப்பதா? என கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக அறிவித்த ஜே.பி.நட்டா பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும், இளைஞர்கள் விரும்புவது வாய்ப்பையும், வளர்ச்சியையும் தான்; தடைகளும், பிரிவினையும் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.