புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது.இந்த புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுத்தியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியது. இதையொட்டி, இந்த விவகாரத்தில், `நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். எனவே எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். என்னுடைய கருத்தை திரும்ப பெற மாட்டேன். என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்து எழுத சொன்னார்கள். நான் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதினேன். விமர்சனங்களுக்கு பதிலளிக்க தயார்’ என்று இளையராஜா தன்னிடம் கூறியதாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில், இளையராஜா விவகாரம் குறித்த கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். அந்த கடித்தத்தில், “இளையராஜாவின் கருத்து ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணிகளுக்கும் பிடிக்கவில்லை என்பதால் இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா??… இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இது மாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றனர்.எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.