புதுடெல்லி:
டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 940 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு விபரத்தை அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய பாதிப்புகள் மொத்தமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதுமான புதிய பாதிப்பு கடந்த 2 நாட்களாக ஆயிரம் என்ற அளவில் இருந்து, இன்று 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதே போல நேற்று டெல்லியில் 517 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 130 ஆக இருந்தது. பின்னர் நாள்தோறும் உயர்ந்து நேற்று முன்தினம் 461 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
அரியானாவில் 191 பேர், உத்தரபிரதேசத்தில் 135 பேர், மகாராஷ்டிராவில் 127 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நேற்று உத்தரபிரதேசத்தில் மட்டும் ஒருவர் இறந்துள்ளார். அதே நேரம் கேரளாவில் விடுபட்ட 213 மரணங்கள் நேற்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிககை 5,21,965 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பிடியில் இருந்து மேலும் 1,985 பேர் முழுமையாக மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 773 ஆக உயர்ந்தது.
தற்போது 11,542 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 16 குறைவு ஆகும்.
விடுமுறை நாளான நேற்று நாடு முழுவதும் 2,66,459 டோஸ்களும், இதுவரை 186 கோடியே 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.