கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய பகுதிகளுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் எனச் சீர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்துக்களுக்குச் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி யாத்திரைகள் மோட்சத்தை அடைய உதவும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் நேரத்தில் நான்கு கோயில்களும் பொதுமக்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும். அப்போது லட்சக்கணக்கான பொது மக்கள் தரிசனத்துக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், ஹரித்வாரைச் சேர்ந்த சாம்பவி தாமின் தலைவர் சீர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர், “தேவ பூமி என்பது கடவுள்கள் மற்றும் முனிவர்கள் பூமியாகும். அங்குப் பழங்காலத்திலிருந்தே ரிஷிகள் தவம் செய்து வருகின்றனர். உத்தரகாண்ட் இந்துக்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் மிகவும் முக்கியமானது. ஆனால், இந்துக்கள் அல்லாதவர்கள் அதிக எண்ணிக்கையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
மேலும், வணிகம் செய்து வரும் அவர்கள் அதிக குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், புனிதமான இமயமலைப் பகுதிக்குக் கெட்ட பெயரைக் ஏற்படுத்துகின்றனர். எனவே, அவர்களை உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, நிலச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், இந்து கோயில்களில் இந்து அல்லாத சடங்குகளை நடத்த எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.