’’இருக்கும் வேலையை விட்டுவிட்டு நிலத்தை தேடி செல்வதா?’’ என அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் இன்றைய தினம் வருவாய் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. வினாக்கள் விடை நேரத்தின்போது செங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ கிரி, செங்கம் தொகுதியில் உள்ள மேல் செங்கத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முன்வருமா? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மேல் செங்கத்தில் தனியாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் இல்லை என்றார்.
அதற்கு, மேல் செங்கத்தில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. மத்திய, மாநில அரசுகள் இங்கு பண்ணை அமைத்தார்கள். அதன்பின் இந்த நிலம் வனத்துறை வசம் சென்றது. ஆனால் இப்போது 12 ஆயிரம் நிலம் எங்கு இருக்கிறது ? யாரிடம் இருக்கிறது ? என்றே தெரியவில்லை. இதனை அரசு கண்டுபிடித்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க முன்வரவேண்டும் என செங்கம் எம்.எல்.ஏ பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பூங்கா அமைக்க நிலம் தேவை, நிலம் இருந்தால் சிப்காட் பூங்கா அமைக்க அரசு பரிசீலிக்கும். ஆனால், எனக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடிக்க செல்வது சிரமமான காரியம். எனவே “அந்த துப்பறியும் வேலையை சட்டமன்ற உறுப்பினரே மேற்கொண்டு நிலத்தை கண்டுபிடித்து கொடுத்தால், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு பரிசீலிக்கும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM