புதுடில்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதேநேரத்தில் தமிழக பா.ஜ.,வினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவரது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், தன் கருத்தை திரும்பப் பெற மாட்டார் என இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.
இந்த நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துகளால் தாக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள், பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாகும்?. இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement