மாஸ்கோ,
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா நடத்தி வரும் போர் 54வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்து உள்ளனர். பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைன் படை வீரர்களில் 23 ஆயிரத்து 300 பேர் இதுவரை கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி இகோர் கொனாஷெங்கோவ் போர் தாக்குதல் பற்றி கூறும்போது, உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய சிறப்பு ராணுவ நடவடிக்கையில், உக்ரைனிய படையில் உள்ள மொத்தம் 470 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, இதுவரை மொத்தம் 136 விமானங்கள், 471 ஆளில்லா விமானங்கள், 249 விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சாதனங்கள், 2,308 பீரங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்கள், 254 பல ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவும் சாதனங்கள், 998 பெரிய ரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கி குண்டுகள் மற்றும் 2,171 சிறப்பு ராணுவ வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார்.
இதுதவிர, ரஷியாவின் ஏவுகணை படைகள் மற்றும் பீரங்கி படைகள், உக்ரைன் நாட்டின் 4 நிலைகள், 2 எரிபொருள் நிலையங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் இலக்குகளை தாக்கி அழித்து உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.