வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: உக்ரைன் – ரஷ்யா போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐ.நா., பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைன் ராணுவத்தினரும் தாக்குதல் நடத்துகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வரும் இந்த போரில், ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது தொடர்ந்து 7 வது வாரமாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரால், 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐ.நா., கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா., பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியிருப்பதாவது: உக்ரைன் – ரஷ்யா போரால், உலகில் 5ல் ஒரு பங்கிற்கு மேல் மக்கள் வறுமை, பசி கொடுமைக்கு ஆளாவார்கள். போரால், வளர்ந்து வரும் நாடுகளும் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இது அவர்கள் பல தசாப்தங்களாக காணாத நிலையை எட்டும். போரால், கோதுமை, சோளம் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. எரிவாயு, உரம் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement