பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் திருநங்கைகள் தாலிக் கட்டிக்கொள்ளும் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்றைய தினம் விழுப்புரத்தில் `மிஸ் கூவாகம்- 2022′ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் வந்திருந்த திருநங்கைகளில் சுமார் 9 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள தனியார் உணவகம் ஒன்றிற்கு இன்று மாலை சென்றுள்ளனர். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து உணவு அருந்திய அவர்கள், தாங்களாகவே உணவை எடுத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, `பரிமாறுவதற்குத் தான் நாங்கள் உள்ளோமே..’ என்று உணவக ஊழியர்கள் கேட்டனராம். அதை தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உணவிற்கான தொகையை செலுத்திய அந்த திருநங்கைகள், உணவக ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், உணவகத்தில் இருந்த சில பொருள்களை சேதப்படுத்தியதோடு, வெளியில் வந்து கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும், பொதுமக்களின் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் உடனடியாக அங்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தபோதும், போலீஸார் முன்னிலையிலேயே அந்த திருநங்கைகள் பிரச்னை செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. சி.சி.டி.வி பதிவினை கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.