சென்னை:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சிவந்தி ஆதித்தனார் ஐயா அவர்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களும் பலமுறை டெல்லியில் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். எனக்கு அவர்களிடம் முதலில் இருந்த தயக்கம் விரைவில் முற்றிலும் விலகியது. அவர் அதிகம் பேசமாட்டார், பேசவைப்பார். அதில் விருப்பமானவை இருக்கும் பட்சத்தில் விளக்கம் கேட்பார். ஒரு மணிநேரம் பேசினோம் என்றால் பேச்சில் 20 சதவீதம் அவரது பங்கும், 40சதவீதம் என்னுடையதாகவும் இருக்கச்செய்வார்.
பத்திரிக்கைத் துறையில் அவர் ஒரு ஜாம்பவான் என்பதை உலகம் அறியும். இருப்பினும் தினத்தந்தி குறித்து எனது மனதில் பட்டவற்றை நான் கூறிய போதும் நிறைகுடமாக அதை கேட்டார். தந்தியின் ஆங்கில ஏடு வர வேண்டும் என்ற என் கருத்தையும் கூறியுள்ளேன்.
வாஜ்பாயின் அமைச்சரவை 2000-ம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்ட போது அதில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராக நியமனம் பெற்று மரியாதைக்குரிய உமா பாரதி அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்றேன்.
இக்கால கட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கான தேர்தல் நெருங்கி வந்தது. இதில் பஞ்சாபின் அன்றைய முதல்வரின் சகோதரர் சுரேஷ் கல்மாடி களம் இறங்கி இருந்தார். இச்சங்கத்தின் தலைவராக 1987 முதல் 1996 வரை திறம்பட செயல்பட்ட ஐயா அவர்களை உமாபாரதியும், நானும் ஆதரித்தோம்.
நெல்லை ரெயில் நிலையத்தின் முன் அமைக்கப் பெற்றுள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் என்னையும் கலந்து கொள்ளச் செய்து ஐயா பெருமைப்படுத்தினார்.
இந்திய அளவில் வாலிபால் போட்டியை பிரபலமாக்கி கிராம அளவில் கொண்டு சென்ற பெருமை ஐயாவையே சாரும். இந்திய விளையாட்டான கபடிக்கு முன்னுரிமை கொடுத்து உலகடையச் செய்த பெருமையும் ஐயாவையே சாரும்.
தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ராஜகோபுரம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து இருந்தது. அதனை அகற்றி இன்று காணும் பிரமாண்டமான 178 அடி உயரம் கொண்ட 7 அடுக்கு ராஜகோபுரத்தை படைத்த பெருமையை ஐயா அவர்கள் பெற்றார்.
தினத்தந்தியின் அதிபர் சி.பா.ஆதித்தனாரின் மகனாக பிறந்திருந்தாலும் தன் நிறுவனத்தின் அடிமட்ட ஊழியனாக வேலையில் சேர்ந்து அதன் அதிபராக உயர்ந்தாலும் தான் முதலில் பணிசெய்த அடிமட்ட ஊழியன் என்பது தான் தன் கவுரவம் என நினைத்து ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை சன் பேப்பர் மில்லில் நடத்தி தன் நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களையும் குடும்பத்துடன் அழைத்து தானும் அதில் குடும்பத்துடன் கலந்து தான் என்றும் பழமையை மறக்காதவர் என்று பறைசாற்றிய பெருந்தகை ஐயாவுடன் பழகிய பின் இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னையும் கலந்து கொள்ளச் செய்து என்னையும் தனதாக்கிக் கொண்டதை என்னால் மறக்க இயலாது.
சென்னையின் அருகாமையில் புழலில் அமைந்துள்ள டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் நிகழ்ச்சியில் பலமுறை கலந்துள்ளேன். ஐயாவின் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துள்ளேன். திருச்செந்தூரில் அமைந்துள்ள அன்னாரது கல்லூரி வளாகத்திலும் ஐயாவின் சிலை திறப்பில் நான் கலந்துள்ளேன். இந்நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்ட போதெல்லாம் என் ஆழ்மனதில் எழுந்த ஒரே கேள்வி மனிதாபமிக்க இந்த ஆளுமையை, தன் கண்ணசைவில் காரியம் முடிக்கும் மன்னனை, நிறை மனிதனை என்று காணப்போகிறோம் என்பதே.
ஐயாவிடம் நான் பேசிய போதும், மற்ற சில இடங்களில் நான் பேசிய போதும் அன்று நான் முன்வைத்த முக்கிய கோரிக்கை ஐயா அவர்கள் ஒரு மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என்பதே. அதனை துவக்குவதால் அவருக்கோ அவரது குடும்பத்தாருக்கோ சுமைகள் நிச்சயமாக கூடும் நினைக்கிறேன். ஆனால் அவரது பெயரால் துவக்கப்படும் மருத்துவக்கல்லூரி மூலம் பல்லாயிரக் கணக்கானோர் சுகம் பெறுவார்கள் என நம்புகிறேன்.
“வாழ்ந்தால் இவன் போல் வாழ வேண்டும் என்று ஊரார்க்கு என்னை உதாரணம் காட்டு” என்று பாரதி ஊருக்கு உதாரணமாக வாழ்ந்தான். அந்த பாரதியை நான் வணங்குபவன் என்பதால் பாரதியின் வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து வாழ்ந்து, மறைந்து வாழும் இம்மாமனிதனை, ஐயாவை வணங்குகிறேன்.