காபூல்: “எங்களது பொறுமையை சோதிக்காதீர்கள்“ என்று வான்வழித் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு மிரட்டல் விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் ஸ்பேரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 40 பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சபிமுல்லா முஜாகிதீன் கூறும்போது, “நாங்கள் முடிந்தவரை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்கிறோம். ஆனால், பாகிஸ்தானின் இம்மாதிரியான நடவடிக்கைகள் பதற்றத்தை உண்டாக்கி மோதலுக்கு வழிவகுக்கும். அதனால் யாருக்கும் பயனில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்தில் இம்மாதிரியான செயல்களை தவிர்க்குமாறு பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
முன்னதாக, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது ஆப்கானிஸ்தான் வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர்.
தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிதானில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், கடுமையான் பஞ்சம் பல இடங்களில் நிலவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.