கலிபோர்னியா: பூமியில் தனக்கென சொந்தமாக வீடு கூட இல்லை எனவும், நண்பர்களின் வீடுகளில் தங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்.
அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்க 43 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தவர் மஸ்க். இவரது சொத்து மதிப்பு 264.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிகிறது. ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவரும், டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாகவும் இயங்கி வருபவர். இருந்தாலும் அவருக்கு சொந்தமாக வீடு இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.
“இப்போதைக்கு எனக்கென சொந்தமாக ஓர் இடம் கூட இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் எனது நண்பர்களின் வீடுகளில்தான் தங்கி வருகிறேன். டெஸ்லா நிறுவன பணி நிமித்தமாக நான் சென்றாலும், அந்த இடங்களில் அமைந்துள்ள நண்பர்களின் மாற்று அறையில் தங்குவேன்.
எனது தனிப்பட்ட செலவுக்காக ஆண்டுதோறும் பில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவு செய்தால், எனக்கு அது சிக்கலை கொடுக்கலாம். ஆனால், அதற்காக நான் இப்படி செய்யவில்லை. நான் சொந்தமாக தனி ஜெட் விமானம் வைத்துள்ளேன். ஆனால், அது இல்லையெனில் எனது வேலைகள் நடக்காது. இருந்தாலும் என்னிடம் நிறையே சொத்துகள் உள்ளது” எனவும் சொல்லியிருக்கிறார் மஸ்க். இதனை வீடியோ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆனால், தனது சொத்து விவரம் குறித்து சொல்ல மறுத்துள்ளார் மஸ்க். டெஸ்லா பங்குகளாக அவரது சொத்துகள் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த 2015-ல் கூகுள் இணை நிறுவனர் லேரி பேஜ் இதனைச் சொல்லியிருந்தார். மஸ்க் சிலிகான் வேலிக்கு வந்தபோது இன்று இரவு எங்கு தங்குவது என தனக்கு தெரியவில்லை என்றும். அங்கு வரட்டுமா? என தன்னிடம் கேட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.