புதுடெல்லி: சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த 2.65 லட்சம் வீரர்கள் காலிபணியிடத்தை நிரப்ப ஒன்றிய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எல்லைப் பாதுகாப்பு படையில் கடந்த 3 மாதத்தில் 9,500 வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரையிலும் பிஎஸ்எப் படையில் புதிதாக இணைந்த 9,550 வீரர்களில் 1,770 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் கடந்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு, ஆயுதத்தை கையாளுதல், துப்பாக்கி சுடுதல், எல்லை மேலாண்மை மனித உரிமைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் 44 வார அடிப்படை பயிற்சியை நிறைவு செய்து படையில் இணைந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் மேலும் பல வீரர்கள் ஆயுதப் படையில் இணைய இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.