கடந்த அதிமுக ஆட்சியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இந்தியில் மொழிபெயர்ப்பு: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று குற்றம் சாட்டினார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று கூறிய உடனேயே, உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும், ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது, ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் கூறி, தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், இன்றைக்கு மொழிப் பிரச்சினையை எடுத்துக் கொண்டு, வீராவேசமாக அறிக்கை விடும்ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனது பக்கத்திலேயே எதிர்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்துகுறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என நழுவிக் கொண்டதை மட்டும் ஏன் வசதியாக மறந்துவிட்டார்?

உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால் பழனிசாமியின் இந்தப் பாசாங்கு செயலைத்தான் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து, முதல்வர் மீதுஉள்நோக்கம் கற்பிக்க முனைந்திருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும்.

உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவிப்பது குறித்தும் தனது அறிக்கையில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள கொலோன்பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் கருணாநிதி பெயரில் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, ‘‘செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழித்தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, தமிழின்தொன்மையையும் பெருமையையும் உலகளாவிய வகையில் எடுத்து செல்லும் வகையில், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை முதல்வர் உருவாக்கியிருக்கிறார்.

இத்தகைய ஆய்வு முடிவுகளையும், அவை சார்ந்த அறிவிப்புகளையும், சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளையும், தமிழ்கூறும் நல்லுலகமும், ஆய்வு நெறி சார்ந்த அறிஞர்களும் மட்டுமின்றி, இந்திய அளவில் பொதுமக்களும் தெரிந்து கொள்வதற்காகத்தான் செய்தி-மக்கள் தொடர்புத் துறைபல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து, இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து பிறநூல்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அன்றைய முதல்வரால் 19-02-2019 அன்று வெளியிடப்பட்டதை ஓ.பன்னீர்செல்வம் மறந்திருந்தாலும், இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் முன்பு தனது பழைய நண்பரான, அன்றைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.