பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா சார்பில் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்தினம் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விஜயநகருக்கு வருகை தந்தார்.
பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-
5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 4 மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
நாட்டில் உள்ள ஒரு தேசிய கட்சி பா.ஜனதா மட்டுமே. சித்தாந்தத்தின் அடிப்படையில் தேசிய கட்சி பா.ஜனதா ஆகும். நாடு தான் முதலில், கட்சி 2-வது தான் என்று பா.ஜனதா இருக்கிறது.
மற்ற கட்சிகள் பிராந்தியவாதம், மொழி, ஜாதி பற்றி பேசி மக்களை பிரிக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியின் சொந்தங்கள் தான் பிற கட்சிகள் ஆகும். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக பேசுகிறார்கள். இது ஒரு சகோதர-சகோதரி கட்சி ஆகும்.
கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். ராமநவமி யாத்திரை, பிற ஊர்வலத்தின் போது நடந்த வன்முறைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.