கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில் இருந்து ரேணிகுண்டா – திருப்பதி வழியாக சென்னைக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 17) மாலை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த சிறப்பு விரைவு ரயில் சேவையில், ரயில் எண் 06223 மற்றும் ரயில் எண் 06224 இந்த வழித்தடத்தில் ஆரம்பத்தில் 22 பயணங்கள் மதிப்பிடுவதற்காக இயக்கப்படுகின்றன. ரயில் எண் 06223 ஒவ்வொரு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜூன் 28 வரை ஷிவமோகாவில் இருந்து புறப்படுகிறது. ரயில் எண் 06224 ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் ஜூன் 29 வரை சென்னையில் இருந்து புறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில் இருந்து ரேணிகுண்டா – திருப்பதி வழியாக சென்னைக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலை இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி. நாராயண கவுடா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சிறப்பு ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பி.ஒய். ராகவேந்திரா எம்.பி. மற்று பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.பி ராகவேந்திரா, திருப்பதி சென்னைக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ள தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் வழங்கிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சோதனைக் காலத்திற்குப் பிறகு, தொடர்ச்சியாக ரயில் சேவையை வழங்கி முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“