கர்நாடக மாநிலம் மங்களூரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள மீன் பதப்படுத்துதல் பிரிவான ஸ்ரீ உல்கா எல்.எல்.பி-யில், கழிவுநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்தவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய போலீஸ் கமிஷனர் குமார், “கழிவுநீர் சேகரிப்புத் தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி ஒருவரைக் காப்பற்ற, கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் குதித்த 7 பேர் மூச்சுத்திணறி மயங்கிவிட்டனர். பின்னர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 3 பேர் நேற்றிரவே உயிரிழந்துவிட்டனர். இன்று காலை 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்தனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இதில் 3 பேர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த பதப்படுத்துதல் பிரிவின் மேலாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை)-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.