காரைக்கால்: காரைக்காலில் இன்று (ஏப்.18) நிழல் இல்லாத நாள் தென்பட்ட நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.சூரியன் செங்குத்தாக வரும்போது ஓரிடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. இதுவே நிழலில்லா நாள் எனப்படுகிறது.
அந்த வகையில், ஏப்.18 ஆம் தேதி காரைக்காலிலிருந்து கோயம்பத்தூர் வரை ஒரே நேர்க்கோட்டில் உள்ள பகுதிகளில் ‘நிழல் இல்லாத நாள்’ தென்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் விஞ்ஞான் பிரச்சார், விஞ்ஞான பாரதி அமைப்புகள், புதுச்சேரி அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியன இணைந்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 3 கல்லூரிகள், 13 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் நிழல் இல்லாத நாள் தென்படுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உபகரணங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் நிழல் இல்லாத நாள் தென்படுவதை பார்த்தனர். இதே போல பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் நிழல் இல்லாத நாள் நிகழ்வை பார்த்து அறிந்து கொண்டனர்.
காரைக்கால்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் ராஜசேகரன், பள்ளியின் துணை முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.
நிழல் இல்லாத நாளை எப்படி துல்லியமாகக் கணக்கிடுவது? இந்த நாளில், ஒரு பகுதியிலிருந்து கொண்டு மற்றொரு பகுதியின் நேரத்தை, பூமியின் சுழற்சி வேகத்தை எப்படி கணக்கிடுவது போன்றவை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.மணிகண்டன் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.