காலிமுகத்திடல் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ள இலங்கையின் முன்னணி ஊடக நிகழ்ச்சி தொகுப்பாளர் (Video)



காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டம் களியாட்டமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கையின் முன்னணி ஊடகமான அத தெரணவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

குறித்த சர்ச்கைக்குரிய காணொளியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மஹிஷ் ஜோனி,

நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதனையும் மறுப்பதற்கில்லை. நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினையானது விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு.

இந்த நாட்டை கொடிய பயங்கரவாதத்திலிருந்து மீட்டு யுத்தத்தை வென்றெடுத்த தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதியும் முன்வந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தாதிருந்த தருணத்தில் பிரதமர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உரையாற்றியுள்ளார்.

போராட்டங்களினால் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் என்ற பிரதமரின் எச்சரிக்கையையும் கரிசனையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமர் மகிந்த ஓடி ஒளிந்து கொள்ளாது இந்தப் பிரச்சினையின் போது மக்களின் எதிரில் தோன்றி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் மௌனத்தை மக்கள் வெறுக்கின்றார்கள்.

போரை வென்றெடுப்பேன் என உறுதியளித்த பிரதமர் அதனை செய்து காட்டினார். அவரது வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டும்.

காலிமுகத்திடலில் நடமாடும் கழிப்பறைகளை நிர்மாணிப்பது பொறியியலாகாது. மக்கள் தங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும்.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்புக்கள் நிதியீட்டம் செய்கின்றன.

காலிமுகத்திடலில் ஒன்று கூடி பாடல் பாடுவதிலும், நடனமாடுவதிலும் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சில விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பிரபலங்கள் இந்த போராட்டக்களத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவதன் மூலமோ அரசாங்கம் பதவி விலகுவதன் மூலமோ இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாது.

புத்திசாதுர்யமான தலைவர் என போற்றப்படும் ரணில் விக்ரமசிங்கவே அரசாங்கம் பதவி விலகுவதனால் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என கூறியுள்ளார்.

மக்களின் குரலை கடத்தி தங்களது நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்ள முனைகின்றனர். இந்த போராட்டத்திற்கு யார் நிதியீட்டம் செய்கின்றார்கள்?

முஸ்லிம் தீவிரவாதிகளும், கத்தோலிக்க தேவாலயங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.

இவ்வாறான போராட்டங்களினால் நாட்டுக்கு பாரியளவில் அதாவது பல நூறு மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.