"கில்லிக்கு முன்னாடியே விஜய் சார்கூட நடிச்சிருக்கேன்; அந்தப் படத்துல…" – ஜெனிஃபர் #18yearsofGhilli

எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் `கில்லி’ படத்திற்கும் இடம் உண்டு. கில்லி வெளியாகி 18 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் தங்கையாக தனது எதார்த்தமாய் நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார் ஜெனிஃபர். ‘கில்லி’ ஜெனிஃபர் என்பதே இவரது அடையாளமாய் மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவரிடம் கில்லி பட அனுபவம் குறித்துப் பேசினோம்.

‘கில்லி’ ஜெனிஃபர்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மீடியாவில் நடிச்சிட்டு இருக்கேன். என் ஒரு வயதிலேயே நடிக்க வந்திட்டதால நடிப்புன்னா எனக்கு அவ்வளவு பிரியம். முழுக்க, முழுக்க மீடியாவிலேயே இத்தனை வருஷம் கவனம் செலுத்தினதால எனக்கு பர்சனலா கொஞ்சம் பிரேக் தேவைப்பட்டுச்சு. அதனாலதான் சீரியலில் நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணி கடந்த 4,5 ஆண்டுகளாக சீரியலில் இருந்து விலகி இருக்கேன். இப்ப என்னுடைய முழு கவனமும் என் பிசினஸில் தான் இருக்கு. அதுதவிர தொடர்ந்து படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். கடந்த ஆண்டு வெளியான ‘ட்ரிப்’ திரைப்படத்தில் நடிச்சிருந்தேன். இன்னும் சில பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. பிடிச்ச கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிச்சிட்டு இருக்கேன் என்றவர் அவருடைய பிசினஸ் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

‘natures joy’ என்கிற பெயரில் கெமிக்கல் ஃப்ரீ பிராடெக்ட்டுகளை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்றோம். சோப் மேக்கிங் போன்றவற்றையும் வீட்டிலேயே கற்றுக் கொடுத்துட்டு இருக்கோம். இது ரெண்டுக்குமே நேரம் சரியா இருக்கு. அதுதவிர, பிரைடல் மேக்கப்பிற்கும் போயிட்டு இருக்கேன். சொந்த தொழிலில் கவனம் செலுத்துறதனால சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியல. எனக்கு பர்சனலா சீரியலைவிட சினிமா பிடிக்கும் என்பதால் அதுல மட்டும் கவனம் செலுத்துறேன். கலைஞர், ஜெயா, சன் டிவின்னு ஆங்கரிங்கும் பண்ணினேன். ஆனா, அதுல என்னால அடுத்த லெவல் போக முடியல. ஆங்கரிங்கை விடவும் நான் பிடிச்சு பண்றதுன்னா அது நடிப்புதான். அதனால, நடிப்பை மட்டுமே இறுகப் பற்றியிருக்கிறேன்.

‘கில்லி’ ஜெனிஃபர்

படம் வெளியாகி 18 வருடங்கள் ஆச்சு. அந்தப் படம் தான் எனக்கு எக்ஸ்ட்ராவாக அங்கீகாரம் கொடுத்துச்சு. வயசானவங்க ஒருத்தங்க என் பேரன் அடிக்கடி கில்லி படம் பார்த்துட்டே இருப்பான்மா நீ இருக்கிறதனால தான் நானும் அந்தப் படத்தை விரும்பி பார்க்கிறேன்னு சொன்னாங்க. நமக்காகவும் படம் பார்க்கிறாங்க. நம்மையும் ரசிக்கிறாங்கன்னு எனக்கு அது ரொம்பவே எமோஷனலான தருணமா இருந்தது என்றவரிடம் கில்லி பட அனுபவம் குறித்துக் கேட்டோம்.

இத்தனை வருஷம் ஆனாலும் அந்த மொமன்ட்டை இன்னைக்கு வரைக்கும் நான் மறந்ததில்லை. மறக்கவும் மாட்டேன்! ரொம்ப, ரொம்ப ஸ்வீட்டான நினைவுகள் அதெல்லாம்! அதுக்கு முதலில் தரணி சாருக்கு நன்றி சொல்லியே ஆகணும். விஜய் சார் நிஜமாகவே என்கிட்ட தங்கச்சி மாதிரிதான் பழகினார். என்னை அவருடைய சொந்த தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டார். அண்ணன் – தங்கச்சி பாண்டிங் தான் எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருந்துச்சு. நான் செட்ல யார்கிட்டேயும் நானா போய் பேச மாட்டேன். அவங்களுக்கான ஸ்பேஸ் கொடுக்கணும்னு யாரையும் தொல்லை பண்ண மாட்டேன். ஆனா, விஜய் சாரே வந்து என்கிட்ட பேசுவாரு. சொல்லப் போனா செட்ல எல்லார்கிட்டேயும் அவர் பேசினதைவிட என்கிட்ட இன்னும் ஸ்பெஷலா பேசியிருக்காரு. ‘நேருக்கு நேர்’ படத்தில் நாங்க சேர்ந்து நடிச்சது அவருக்கு ஞாபகம் இருந்துச்சு. அதனாலதான் அவருக்கு இந்தப் பொண்ணு நல்லா நடிக்கும் என்கிற நம்பிக்கையில் ஸ்பார்ட்ல சீன் பண்ணும்போது இதை இப்படி பண்ணலாம்னு எக்ஸ்ட்ராவாக சொல்லிக் கொடுப்பார். தரணி சாரும் சரி, விஜய் சாரும் சரி எக்ஸ்ட்ராவாக சில விஷயங்கள் பண்ண வச்சாங்க. 

‘கில்லி’ ஜெனிஃபர்

எனக்கு பர்சனலா விஜய் சார் ரொம்ப லக்கி. அவருடன் நடிச்ச ‘நேருக்கு நேர்’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் ஸ்டேட் அவார்டு எனக்குக் கிடைச்சது. அதற்கு பிறகு அவருடன் நடிச்ச ‘கில்லி’ படம் தான் இன்னைக்கு என் அடையாளமா இருக்கு. நான் நடிப்பை என்னைக்குமே விடப் போறதில்லை. விஜய் சாரும் நிச்சயம் நடிப்பைவிட மாட்டாரு. அவருடன் சேர்ந்து நிச்சயம் மீண்டும் நடிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

‘கில்லி’ நானாக தேடிப் போய் கிடைச்ச வாய்ப்பு கிடையாது. அந்தப் படத்தில் நடிக்கிறதுக்காக 100 பேரை ஆடிஷன் பண்ணி ஒருத்தங்களை செலக்ட் பண்ணி அட்வான்ஸ் கூட கொடுத்திருக்காங்க. நாளைக்கு ஷூட்னா இன்னைக்கு சாயங்காலம் என் அப்பா ஸ்கூலுக்கு வந்து விஜய் சாருடைய படத்துக்காக கூப்டாங்கன்னு சொல்லி கூட்டிட்டு போனார். ரெட்டை ஜடை போட்டுட்டு யூனிஃபார்ம் மட்டும் மாத்திட்டுப் போனேன். என்னை பார்த்ததும் இதே லுக் ஓகேம்மா. கண்ணாடி மட்டும் போட்டுக்கோங்கன்னு சொல்லி என்னை ஓகே பண்ணினாங்க. எனக்கு முதல் ஷூட்டே கிளைமாக்ஸ் ஷூட் தான். நான் கிளிசரின் இல்லாம அழுததைப் பார்த்து எல்லாரும் பாராட்டினாங்க.  

‘கில்லி’ ஜெனிஃபர்

படத்துடைய வெற்றி விழாவில் விஜய் சார் ரொம்ப நல்லா நடிச்சிருக்கேன்னு பாராட்டினாரு. ‘டேய் பதிலை சொல்லுடா’ன்னு அந்தப் படத்தில் நான் சொல்ற டயலாக் ஏன் விஜய் சாருக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியாது. செட்ல அடிக்கடி என்னை கூப்பிட்டு அந்த டயலாக்கை பேசச் சொல்லுவார். ‘கில்லி’ எந்த அளவுக்கு அங்கீகாரம் கொடுத்துச்சோ அந்த அளவுக்கு வாய்ப்புகளும் எனக்கு மிஸ் ஆகியிருக்கு. அது இந்தப் படத்தினாலன்னுலாம் நான் சொல்ல மாட்டேன். இந்தப் படத்திற்கு பிறகு தங்கச்சி கதாபாத்திரமே தொடர்ந்து வந்துச்சு. ஆனாலும், அந்த கேரக்டர் எல்லாம் மக்கள் மனசுல பதியல. பெரிய அளவில் ரசிகர்களைக் கொடுத்த திரைப்படம்னா அது ‘கில்லி’ மட்டும்தான்! 

‘கில்லி’ ஜெனிஃபர்

நான் என்னைக்கும் உடைஞ்சு போகிற ஆள் கிடையாது. இது இல்லைன்னா இதை விட பெருசா நமக்கு ஏதோ கிடைக்கப் போகுது என்கிற எண்ணத்தில் துவண்டிடாமல் தொடர்ந்து ஓடிட்டே இருப்பேன். என் அப்பா ரயில்வேயில் ஒர்க் பண்ணாங்க. நான் நடிக்கணும் என்கிற காரணத்தினால் வேலையை விட்டுட்டாங்க. இப்ப கடைசியா நான் நடிச்ச சீரியல் வரைக்குமே ஷூட்டிங் ஸ்பார்ட்ல என்கூட அம்மாவும், அப்பாவும் இருப்பாங்க. செட்ல யார்கிட்டேயும் தேவையில்லாம பேச விட மாட்டாங்க. அவ்வளவு கேர் எடுத்து என்னை பார்த்துப்பாங்க. செட்ல என்னை ரொம்ப நல்லா வச்சிப்பாங்க. அம்மா, அப்பாவுக்காகத்தான் சீரியலுக்கு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டேன்னு சொல்லலாம். இத்தனை வருஷம் எனக்காக என் கூடவே சேர்ந்து அவங்களும் ஓடிட்டாங்க. இப்ப அவங்களுக்கும் சின்ன ரெஸ்ட் கொடுத்திருக்கேன்.

முக்கியமான விஷயம்… என் கல்யாணத்துக்கு கண்டிப்பா விஜய் சாரை கூப்பிடுவேன். அவரை மீண்டும் சந்திச்சு ஜாலியா நிறைய விஷயங்கள் பேசுவேன் எனப் புன்னகைக்கிறார் ஜெனிஃபர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.