கொரோனா கட்டுப்பாடுகள்; ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

புதுடெல்லி,
உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  கடந்த ஜனவரியில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு 2 வார கால தடை விதிக்கப்பட்டது.

அந்த காலகட்டத்தில் உலக நாடுகளில் தொடர்ந்து ஏற்பட்ட ஒமைக்ரான் பரவலை சுட்டி காட்டி இந்த தடை அமலுக்கு வந்தது.  இதனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய 8 நாடுகளை சேர்ந்த விமான பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, அதில் பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும்.  அதன்பின்னரே, அவர்கள் ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஹாங்காங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு ஹாங்காங்கிற்கான ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, வருகிற 19ந்தேதி (நாளை) மற்றும் 23ந்தேதி ஹாங்காங்கில் இருந்து நாடு திரும்பும் ஏர் இந்தியா விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.