“சசிகலா குறித்த முன்னாள் அமைச்சர்களின் கருத்து கட்சியின் கருத்தல்ல..!''- விளக்கும் கோவை செல்வராஜ்

அ.தி.மு.க-வில் இரண்டாம் கட்ட உட்கட்சித் தேர்தல் மிகத் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜைச் சந்தித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்…

அதிமுக தலைமை அலுவலகம்

“உட்கட்சித் தேர்தல் குறித்து கலந்தாலோசிக்க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகினவே?“

“அ.தி.மு.க-வில் ஜனநாயகரீதியில் சுதந்திரமாக அனைத்துத் தலைமைக் கழக நிர்வாகிகளும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அதைத் தலைவர்கள் பரிசீலிப்பதாகக் கூறினார்கள். காரசாரமான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. கட்சியைப் பொறுத்தவரை தற்போது ஜனநாயக முறையில் இயங்குவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதால் சிறப்பாகக் கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது”

“முதல்வர் வேட்பாளர் தொடங்கி தற்போது வரை இரட்டைத் தலைமைகளுக்கு இடையே பனிப்போர் இருப்பதாகத்தானே தெரிகிறது?”

“அம்மா அவர்களால் இரண்டு முறையும், அவரின் மறைவுக்குப் பிறகு ஒரு முறையும் என மூன்று முறை முதலமைச்சராகப் பணியாற்றியவர் அண்ணன் ஓ.பி.எஸ். அதேபோல, அண்ணனுக்குப் பிறகு சந்தர்ப்ப சூழ்ல்நிலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களும் நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்தார். தேர்தல் நேரத்தில் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது எங்களைப் போன்ற தொண்டர்களின், நிர்வாகிகளின் விருப்பம். ஆனால், பெருந்தன்மையாக அண்ணன் ஓ.பி.எஸ்-தான், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார். இந்தியாவில் வேறெந்தக் கட்சித் தலைவரும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கட்சி நலனுக்காக அண்ணன் அனைத்து விஷயங்களிலும் விட்டுக் கொடுக்கிறாரே தவிர வேறொன்றும் இல்லை.”

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

“ கட்சிக்குள் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?”

“எடப்பாடி அண்ணன் அப்படித் தனக்கென ஓர் அணியை வைத்துக்கொள்ளவில்லை. அண்ணன் ஓ.பி.எஸ்-ஸும் தனக்கென ஓர் அணியை வைத்துக்கொள்ளவில்லை. முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள், கட்சியின் தலைவர்களே தங்களுக்கென ஓர் அணியை எதற்காக வைத்துக்கொள்ள வேண்டும்… இதுவரை அப்படியொரு நிலைமை உருவாகவில்லை, இனிமேலும் உருவாகாது.”

“கட்சிக்குள் வேறு யாரும் தனி அணியாகச் செயல்படுகிறார்களா?”

“மாவட்ட அளவில் சில குளறுபடிகள் நடந்திருக்கின்றன. தங்களுக்கு ஆதரவானவர்களை நிர்வாகிகளாக நியமித்திருக்கிறார்கள். அதற்காக வருந்துகிறோம். உட்கட்சித் தேர்தல் நடைபெறுவதால் இனிமேல் அதற்கு வாய்பிருக்காது.”

ஜெயலலிதா

“அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்தபோது ஒற்றையதிகாரமாக இருந்தது, தற்போது மாவட்ட அளவில் பல்வேறு அதிகார மையங்கள் உருவாகிவிட்டனவா?”

“அம்மா இருக்கின்றபோதும் மாவட்டச் செயலாளர்கள்தான் நிர்வாகிகள் நியமனத்துக்கான பட்டியலைக் கொடுப்பார்கள். அம்மா அதில் ஒருவரைத் தேர்வு செய்வார். ஆனால், ஒருசில மாவட்டச் செயலாளர்கள், தங்களைத் தவிர மாவட்டத்துக்குள் வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்தார்கள். தற்போது தேர்தல் மூலமாக தேர்தெடுக்கப்படுவதால் அதற்கான சூழல் இனி உருவாகாது.”

“ `அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பிறகும் சசிகலா அ.தி.மு.க-வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?’’

“தலைமைக் கழகம்தான் அதை முடிவுசெய்யும். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் யாரும் வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ தேவையில்லாமல் பேசுவதில்லை. எங்கள் கட்சியை வலுப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற வைப்பதற்கான வேலைகளைத்தான் நாங்கள் கவனித்துவருகிறோம்.”

“ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் எதுவும் பேசுவதில்லை சரி… ஆனால், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ போன்றவர்கள் சசிகலாவைக் கடுமையாக விமர்சிக்கிறார்களே?”

“கட்சித் தலைமையின் கருத்தும், கட்சித் தலைமையிடம் முறையாக அனுமதி பெற்று பேசப்படுபவை மட்டுமே கட்சியின் கருத்து. அப்படி அல்லாமல் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் தங்கள் இஷ்டத்துக்கு என்ன சொன்னாலும் அது அவர்களின் சொந்தக் கருத்து மட்டுமே. அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.”

சசிகலா

“தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிக்கான ரேஸில் அ.தி.மு.க-வை நெருங்குகிறதா பா.ஜ.க?”

“அ.தி.மு.க இந்தியாவிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரம்போல மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம். 66 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். பல போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம். நான்கு எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட பா.ஜ.க-வின் செயல்பாடு என்பது வேறு. அ.தி.மு.க என்கிற இயக்கத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. தி.மு.க-வை எதிர்கொள்ள அ.தி.மு.க-வால்தான் முடியும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.