சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 21 முதல் 24-ந்தேதி வரை 4 நாட்கள் இரு பட்ஜெட்டுகள் மீதும் விவாதம் நடந்து முடிந்தது.
இம்மாதம் 6-ந்தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணி துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலன், பால் வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து முடிந்துள்ளது.
இந்தநிலையில், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என மொத்தம் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.  இன்றைய கூட்டத்தில், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 
கேள்வி நேரம் முடிந்ததும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசுகிறார். தனது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.