வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ், சமூக வலைதளங்கள் மூலம் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாகவும், எனவே சமூக ஊடகங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
டில்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது, மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையின் போது அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசாரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறியதாவது: வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 8 போலீசார் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து வருகிறோம்.
சமூக வலைதளங்கள் மூலம் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். எனவே, சமூக ஊடகங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம். குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்த ஒரு நபர் மீதும் அவர்களின் வகுப்பு, மதம், சமூகம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement