சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி 24ம் தேதி காஷ்மீர் பயணம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு: ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி வரும் 24ம் தேதி அங்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். அதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுவதால், காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்துக்கு  உட்பட்ட பாலி கிராமத்தில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில்  பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். ஜம்மு விமான நிலையத்தில்  இருந்து நேராக பாலி கிராமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கே 30  ஆயிரத்துக்கு மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும்  பிரமாண்ட கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். நாடு முழுவதிலும் இருந்து 700 பஞ்சாயத்துகளின் உறுப்பினர்களும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர். காஷ்மீரின்  தலைநகர் ஜம்முவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள பாலி  கிராமம், காஷ்மீரின் முதலாவது கார்பன் இல்லா சோலார் பஞ்சாயத்து என்ற நிலையை  எட்டியுள்ளது. முன்னோடி கிராமமான இந்த பஞ்சாயத்தில், ரூ.2.75 கோடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த மின்நிலைய பணிகளை 25 பேர் கொண்ட குழு இரவு பகலாக அமைத்து வருகிறது. இந்த மின் நிலையத்தை 24ம் தேதி பிரதமர் மோடி முறைப்படி திறந்து வைக்கிறார். இதைத்தவிர  ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளை தொடங்கி  வைப்பதுடன், 2 மின் திட்டங்கள் உள்பட சில வளர்ச்சி திட்டங்களுக்கான  அடிக்கல்லும் பிரதமர் மோடி நாட்டுகிறார். ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன் முதலாக பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அங்கு செல்கிறார். அதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக 2019 அக்டோபர் மற்றும் 2021  நவம்பர் மாதங்களில் அவர் காஷ்மீர் எல்லைக்கு சென்றிருந்தது  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.