பீஜிங்,
சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில், 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது.
கண்டிப்புடன்கூடிய ஊரடங்கு அந்த நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வீடுகளுக்குள் மக்கள் முடங்கி உள்ளனர்.
ஆனாலும் அங்கு உள்ளூர் தொற்றாக நேற்று முன்தினம் மட்டும் 3,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 21 ஆயிரத்து 500 உள்ளூர்வாசிகளுக்கு அறிகுறியற்ற பாதிப்பு இருப்பதாக ஷாங்காய் நகர சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் நகர ஊரடங்கால், அங்கு கப்பல்கள் கட்டும் பணி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது அந்த நாட்டின் 3-வது விமானம் தாங்கி கப்பல் கட்டும் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த கப்பலை சீன ராணுவத்தின் 73-வது நிறுவன தினமான வரும் 23-ந் தேதி சீனா தொடங்கி வைப்பதாக இருந்தது. அதிலும் பாதிப்பு ஏற்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. அதில், ஷாங்காயில் பரவியுள்ள தொற்றுநோய் காரணமாக, கப்பல் கட்டுமான பொருட்களின் வருகை தாமதமாகி உள்ளது. இதனால், விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டம், தாமதத்தை சந்தித்துள்ளது என கூறி உள்ளது.
இந்த விமானம் தாங்கி கப்பல் கட்டும் பணி ஷாங்காய் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வந்தது.
சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், 320 மீட்டர் நீளம்கொண்ட அந்த கப்பல் கட்டும் பணி நிறைவு அடைந்து கொண்டிருப்பதை காட்டின.
சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் என்ற பெயர், லியோனிங் என்ற கப்பலுக்குத்தான் உண்டு. இரண்டாவது கப்பல், முதல் உள்நாட்டு கப்பலாக 2019-ம் ஆண்டு அறிமுகமானது. சீனா 2030-க்குள் 4 விமானம் தாங்கி கப்பலை கட்ட முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.