புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு அடுக்குகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. 5 சதவீத வரியின்கீழ் வரும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு 3 சதவீதமாக வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை கொண்டுவரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒப்பந்தம், வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், மாநிலங்கள் தங்கள் வரி வருவாயை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன.
வரி வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மாநில அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழு புதிய பரிந்துரைகளை உருவாக்கி வருகிறது.
இதனிடையே, ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 அடுக்கு வரிவிதிப்பு
தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் உள்ளது. இதுதவிர தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
பிராண்ட் அல்லாத, பாக்கெட்களில் அடைக்கப்படாத உணவுவகைகள் மற்றும் சில பொருட்களுக்கு தற்போது ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி அவையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக உணவுஅல்லாத பொருட்கள் 3 சதவீதவரி அடுக்கின்கீழ் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 5 சதவீத வரி அடுக்கில் உள்ளவற்றில், சில அத்தியாவசியப் பொருட்களை மட்டும் 3 சதவீத வரம்புக்குள் கொண்டுவரவும், மற்றவற்றை 7 முதல் 9 சதவீத வரம்புக்கு உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 5 சதவீத வரியில் உள்ள பொருட்களுக்கு 1 சதவீதம் வரி அதிகரிக்கும்போது அரசுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்த மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.