சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2015-16 ஆண்டின் வருவாயை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் வரி வருவாய் 14சதவீதம் உயர்வது உறுதி செய்யப்படும் என்றும், அதில் குறையும் தொகையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு நிர்ணயித்திருந்த ஐந்தாண்டு காலம் நடப்பாண்டுடன் நிறைவடையவிருக்கும் நிலையில், இனி இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு மறுத்து விட்டது. அதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவே இந்த இமாலய ஜி.எஸ்.டி வரி உயர்வை ஜி.எஸ்.டி குழு அறிவிக்கவுள்ளது. மாநிலங்களுக்காக அறிவிக்கப்படும் வரி உயர்வின் பயனை மத்திய அரசு அனுபவிக்கும். அதன் பாதிப்புகளை மட்டும் மக்கள் சுமக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி உயர்வால் தொழில்களும் பாதிக்கப்படும். கைத்தறி துணிகள் மற்றும் பட்டுப்புடவைகள் மீதான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதத்தல் இருந்து 12சதவீதம் ஆக உயர்த்த அண்மையில் முயற்சி நடந்தது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் கைத்தறி தொழில் சீரழிந்து விடும் என்று எச்சரித்து நடத்தப்பட்ட போராட்டத்தால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இப்போது ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால் கைத்தறி மற்றும் பட்டுத்துணி தொழில் பாதிக்கப்படும். இதேபோல், மேலும் பல தொழில்களும் ஜி.எஸ்.டி வரி உயர்வால் வீழ்ச்சியடையும்.
உலகில் அதிக ஜி.எஸ்.டி வரி விகிதம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் 7 விழுக்காடும், கனடா போன்ற சில நாடுகளில் 5 விழுக்காடும் மட்டுமே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் சராசரியாக 18சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரே அடுக்கு வரி வசூலிக்கப்படும் நிலையில், இந்தியாவில் 5 அடுக்கு ஜி.எஸ்.டி வரி நடைமுறையில் உள்ளது.
உலகின் பல நாடுகளில் ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்ட 2 அல்லது 3 ஆண்டுகளில் விலைவாசி குறைந்து வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி அறிமுகமாகி 5 ஆண்டுகள் நிறைவடையும் போதிலும் விலைவாசி உயர்வு நிற்கவில்லை.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகளின் வருவாய் இழப்பை மத்திய அரசே இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும். இந்த நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.