புதுடில்லி : ஜி.எஸ்.டி., வருவாயை கணிசமாக உயர்த்தும் வகையில் வரிவிதிப்பு விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017ல் அமலுக்கு வந்தது. இதில் 5, 12, 18, 28 சதவீதங்கள் என, நான்கு விகிதாச்சாரங்கள் உள்ளன.தங்கத்துக்கு மட்டும் 3 சதவீதம் என தனி விகிதாச்சாரம் உள்ளது. உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பின் போது வீழ்ச்சி அடைந்த ஜி.எஸ்.டி., வருவாய் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1.42 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் கொண்டுவர கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், ஜி.எஸ்.டி.,யின் 5 சதவீத விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3 சதவீத விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு, வேறு சில பொருட்களை 8 சதவீதம் என்ற புதிய விகிதாச்சாரத்திற்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களை 3 சதவீத விகிதாச்சாரத்தில் கொண்டுவரவும், அதேசமயம் 5 சதவீத விகிதாசாரத்தில் உள்ள சில அத்தியாவசிய பொருட்களை 8 சதவீத விகிதாச்சாரத்துக்கு உயர்த்தவும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Advertisement