டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமித் ஷா

புதுடெல்லி: ஜகாங்கீர்புரி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியிருப்பதாவது, சனிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மூன்று ஊர்வலங்கள் நடந்தன. மூன்றாவது ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில் அதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.அந்த ஊர்வலம் கோயில் அருகே மசூதி இருக்கும் பகுதி வழியாக சென்றுள்ளது. ஊர்வலத்தில் சென்றவர்கள் காவிக்கொடியை ஏந்திய படி சென்றுள்ளனர். அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் எழுப்பிய கோஷம், தொழுகை செய்யும் ஒலியும் ஒன்றுக்கொன்று போட்டியாக கேட்டுள்ளது.

இதனால் மசூதியில் தொழுது கொண்டிருந்தவர்களுக்கும், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தியதாக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஎச்பி செயல்பாட்டாளரான பிரேம் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் அவர்கள் மசூதியை சேதப்படுத்த முயன்றதாகவும் முஸ்லிம்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊர்வலத்தின் போது தங்களின் கைகளில் ஆயுதம் இருந்ததாக ஊர்வலத்தில் சென்றவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.ஆனால் முஸ்லிம்கள் தங்களின் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுப்பட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த கலவரம் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறும் போது, ” குற்றவாளிகள் அனைவரையும் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை இரு சமூகங்களைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசயத்தில் வகுப்பு, மதம், சமூகம் என எந்த பாகுபாடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்கள் மூலம் சிலர் அமைதியை குலைக்க முயல்கின்றனர். சமூக ஊடகங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தவறான தகவல் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், ஜகாங்கீர்புரி வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தேசியத் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை இரவு ஊர்வலம் நடந்தது. மசூதி ஒன்றை ஊர்வலம் கடந்து சென்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்சார் என்பவர் ஊர்வலத்தில் சென்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மோதலாக மாறி இரு தரப்பினரும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அஸ்லாம் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் டெல்லி போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் மெதாலால் மீனா என்பவர் கையில் குண்டு பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வன் முறையில் 8 போலீஸார் உட்பட 9 பேர் காயம் அடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.