மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளனின் மறைவிற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அசாமின் கவுஹாத்தியில் இருந்து 3 வீரர்களுடன் விஷ்வா, காரில் புறப்பட்டுச்சென்றார். மேகாலயா ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி மீது, அவர்கள் சென்ற கார் மோதியதில் விஸ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்ற வீரர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறைந்த விஷ்வாவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையே, விஸ்வாவின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு அமைச்சர் மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து பேட்டியளித்த அவர், வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.