“தனிப்பட்ட முறையில் ஆளுநரிடம் எந்த விரோதமும் இல்லை!” – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது. இதன் காரணமாக ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்குமிடையே மோதல் மேலும் அதிகரித்திருப்பதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்” என கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய ஸ்டாலின், “நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா சட்ட முன்வடிவு, கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கக்கூடிய தேநீர் விருந்து என்ற விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், மேலும் சிதைப்பதாகவும் அமைவதாலேயே அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இயலாத நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டது. ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் தமிழக ஆளுநருக்கும், தமிழ்நாடு முதலமைச்சரான எனக்கும் மிக மிக சுமூகமான உறவு இருக்கிறது. ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம், அளித்துக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து அளிப்போம். இது அரசியல் எல்லைகளைக் கடந்த பண்பாடு.

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

இந்த சட்டமன்றத்தின் மாண்பை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து நீட் விலக்கு மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. எனவே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்ட முன்வடிவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தான் முக்கியம். அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அது தொடர்பான நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த அவையில் தெரிவிக்கிறோம்” கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.