சென்னை: தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடட்டுமா என்று எச்சரிக்கை செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய கோட்டோ தவிர மற்ற அனைத்தும் மாநில அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மட்டுமே மாநில அரசு நடத்தும் கலந்தாய்வால் நிரப்பப்படுகிறது. தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களை அவர்களிடமே கொடுத்து விடுகிறது. இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து, பணம் உள்ளவர்கள் இடங்கறை பறித்துக் கொள்கின்றனர்.
2020-2021 ஆம் கல்வியாண்டில் 113 காலியிடங்களில் 90 இடங்களுக்கு தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கையை நடத்துவதால், தாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக இரண்டு மருத்துவ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்த நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடத்தாதது ஏன் என தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தனியார் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பான வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என்று கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.