தமிழக மீனவர்கள் விவகாரம் | மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவதும், நடுக்கடலில் நமது எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்துவதும், இலங்கை கடற் தொழிற் சட்டத்தின் கீழ் நமது மீனவர்களைக் கைது செய்து, அந்நாட்டு சட்டப்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும், பல லட்சக்கணக்கான ரூபாய் தண்டம் விதிப்பதும், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை பறிமுதல் செய்வதும் நாள்தோறும் ஏடுகளில் செய்தி ஆகிவிட்டன.

இலங்கை அரசின் அத்துமீறலைக் கண்டும் காணாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணைபோன இந்திய அரசு, பன்னாட்டு நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசாங்கத்திற்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை மக்கள் மீள முடியாத துயரத்தில் தவிக்கிறார்கள்.

கோத்தபய ராஜபக்சே அரசை எதிர்த்து சிங்கள மக்களே கொதித்து எழுந்து தெருக்களில் போராடி வருகின்றனர். இதனால் இந்தியாவிடம் நிதி உள்ளிட்ட எல்லா உதவிகளையும் இலங்கை அரசு கேட்டுப் பெற்று வருகிறது. இந்தியா பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. மேலும் நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வுரியைப் பறித்து, காணிகளை கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்து, ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியாகவே வடக்கு, கிழக்குப் பகுதிகளை இன்னமும் சிங்கள இனவாத அரசு கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது.

பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத்தமிழர்கள் குழந்தைகளுக்கு பால் பவுடர் கூட வாங்க வழியில்லாமல், ஆபத்தான படகுப் பயணம் செய்து தமிழகத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசு ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று, கைப்பற்றிய படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை ஒப்படைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மறுமலர்ச்சி திமுக சார்பில் ஏப்ரல்-22 ஆம் நாள் மாலை 4 மணி அளவில், ராமேஸ்வரத்தில், தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் பேட்ரிக் அவர்கள் ஒருங்கிணப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன், சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.