தமிழைத் தவிர மற்ற மொழிகளில் 'பீஸ்ட்' தோல்வியா ?
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த 'பீஸ்ட்' படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
இவற்றில் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் இப்படம் தோல்வியைத் தழுவும் சூழ்நிலையில் உள்ளதாக மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் கடந்த ஐந்து நாட்களில் மொத்தமாக ரூ.200 கோடி வசூலைக் கடந்திருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் தமிழிலிருந்து மட்டும் கிடைத்துள்ளது.
தெலுங்கில் சுமார் ரூ.10 கோடிக்கு விற்கப்பட்டு இதுவரையில் ரூ.12 கோடி தான் வசூலித்துள்ளதாம். அங்கு லாபத்தைப் பெற இன்னும் ரூ.4 கோடி வசூல் தேவைப்படுகிறதாம். அது போல கேரளாவில் ரூ.8 கோடிக்கு விற்கப்பட்டு வசூல் ரூ.10 கோடி கிடைத்துள்ளதாம். கர்நாடகாவில் ரூ.8 கோடிக்கு விற்கப்பட்டு ரூ.13 கோடி வரை வசூலித்துள்ளதாம். வட இந்தியாவில் ரூ.3 கோடிக்கு விற்கப்பட்டு 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். வெளிநாட்டு உரிமை ரூ.31 கோடிக்கு விற்கப்பட்டாலும் ரூ.55 கோடி வசூலை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழகம், வெளிநாடுகளில் மட்டும் இப்படம் குறிப்பிடத்தக்க லாபத்தைத் தர வாய்ப்புள்ளதாகவும், மற்ற இந்திய மாநிலங்களில் இப்படம் லாபத்தைத் தர வாய்ப்பில்லை என்றும் இன்றைய நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான்-இந்தியா படம் என்று சொல்லப்பட்ட 'பீஸ்ட்' படத்தை ஒரே ஒரு டிவி பேட்டியில் மட்டுமே பிரமோஷன் செய்தார் விஜய். மற்ற மாநிலங்களுக்கு அவர் செல்லவேயில்லை. அதேசமயம் 'கேஜிஎப் 2' படத்திற்காக அதன் கதாநாயகன் யஷ் அனைத்து மொழிகளுக்கும் சென்று பிரமோஷன் செய்தார். ஹிந்தியில் 'பீஸ்ட்' 3 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ள நிலையில் அங்கு 'கேஜிஎப் 2' படம் 160 கோடி வசூலைக் கடந்துள்ளது குறிப்பிடடத்தக்கது.