ED provisionally attaches assets worth Rs 757.77 crore belonging to Amway India: ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் (ED) திங்கள்கிழமை தெரிவித்தது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், ஆலை மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள், வங்கி கணக்குகள் மற்றும் பிக்சட் டெப்பாசிட் ஆகியவை அடங்கும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான 36 வெவ்வேறு கணக்குகளில் இருந்து ரூ.411.83 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.345.94 கோடி வங்கி இருப்புகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் பணமோசடி விசாரணையில், ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை மல்டி லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என்ற போர்வையில் பிரமிட் மோசடியை நடத்தி வருவது தெரியவந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
“வெளிச்சந்தையில் கிடைக்கும் புகழ்பெற்ற உற்பத்தியாளர்களின் பிரபலமான தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில், ஆம்வே நிறுவனம் வழங்கும் அதே தயாரிப்புகளின் விலைகள் மிக அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது” என்று அமலாக்கத்துறை கூறியது.
ஆம்வே நிறுவனம் 2002-03 முதல் 2021-22 வரை தனது வணிக நடவடிக்கைகளில் இருந்து ரூ.27,562 கோடியை ஈட்டியுள்ளதாகவும், மேற்கூறியவற்றில், 2002-03 நிதியாண்டில் இருந்து 2020-21 வரை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் விநியோகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நிறுவனம் ரூ.7,588 கோடி கமிஷனாக செலுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
“உண்மையான நிலவரம் தெரியாமல், அப்பாவி பொது மக்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர தூண்டப்பட்டு, அதிக விலைக்கு பொருட்களை வாங்கத் தூண்டப்பட்டு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கின்றனர். புதிய உறுப்பினர்கள் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக வாங்கவில்லை, அவர்கள் மேல்நிலை உறுப்பினர்களால் காண்பிக்கப்படும் பணக்காரர் தோற்றத்திற்கு விருப்பப்பட்டு, தாங்களும் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதற்காக உறுப்பினர்களாகி வாங்குகின்றனர். உண்மை என்னவென்றால், மேல்நிலை உறுப்பினர்களால் பெறப்படும் கமிஷன்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்துவதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன,” என்று அமலாக்கத்துறை கூறியது.
உறுப்பினர்களாக ஆவதன் மூலம் உறுப்பினர்கள் எவ்வாறு பணக்காரர்களாக மாறலாம் என்பதைப் பிரச்சாரம் செய்வதே நிறுவனத்தின் முழு வேலையாக இருந்துள்ளது என்று அமலாக்கத்துறை கூறியது. மேலும், “தயாரிப்புகளில் கவனம் இல்லை. இந்த MLM பிரமிட் மோசடியை ஒரு நேரடி விற்பனை நிறுவனமாக மறைக்க தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன,” என்றும் அமலாக்கத்துறை கூறியது.
இதையும் படியுங்கள்: அரசு சொற்ப உதவித் தொகை; மாற்றுத் திறனாளிகளுக்கு அவமானம்: ஐகோர்ட் கண்டனம்
இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த ஆம்வே இந்தியா நிறுவனம், ஒரு அறிக்கையில், “அதிகாரிகளின் நடவடிக்கை 2011 ஆம் ஆண்டுக்கு முந்தைய விசாரணை தொடர்பானது, அதன் பின்னர் நாங்கள் துறையுடன் ஒத்துழைத்து வருகிறோம், மேலும் 2011 முதல் அவ்வப்போது கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறையிடம் வழங்கியுள்ளோம். நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான, சட்டபூர்வமான மற்றும் தர்க்கரீதியாக முடிவெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்” என்று கூறியது.
மேலும் “இருப்பினும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (நேரடி விற்பனை) விதிகள், 2021 இன் கீழ் நேரடி விற்பனையை சமீபத்தில் சேர்த்தது, தொழில்துறைக்கு மிகவும் தேவையான சட்ட மற்றும் ஒழுங்குமுறை தெளிவைக் கொண்டு வந்துள்ளது, அதே நேரத்தில் ஆம்வே இந்தியா தொழில்துறையுடன் தொடர்ந்து இணங்குவதோடு, இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆம்வே அதிக அளவிலான நன்னடத்தை, ஒருமைப்பாடு, பெருநிறுவன நிர்வாகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்த ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற நிலுவையில் உள்ளது என்பதால், மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நாட்டில் உள்ள 5.5 லட்சத்துக்கும் அதிகமான நேரடி விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில், எங்கள் வணிகத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் கூறியுள்ளது.
ஆம்வே நிறுவனம் 1996-97 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரூ.21.39 கோடியை பங்கு மூலதனமாகக் கொண்டுவந்துள்ளது, மேலும் 2020-21 நிதியாண்டு வரை, நிறுவனம் தங்களது முதலீட்டாளர்கள் மற்றும் மூல நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை, ராயல்டி மற்றும் பிற படிகள் என்ற பெயரில் ரூ.2,859.10 கோடிக்கு பெரும் தொகையை அனுப்பியுள்ளது.
” M/s. பிரிட் வேர்ல்டுவைட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் M/s. நெட்வொர்க் ட்வென்டி ஒன் பிரைவேட் லிமிடெட், ஆகியவை இந்த தொடர் அமைப்பில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, பொருட்கள் விற்பனை என்ற போர்வையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கருத்தரங்குகளை நடத்தி ஆம்வேயின் பிரமிட் திட்டத்தை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகித்தன. இந்த விளம்பரதாரர்கள் மெகா மாநாடுகளை நடத்துகிறார்கள் மற்றும் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் ஏமாறும் முதலீட்டாளர்களை ஈர்க்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர், ”என்று நிறுவனம் கூறியது.