திட்டக்குடி: திட்டக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து, அவரை தாக்கி பின்னர் காவல்துறையிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்த முத்துராமன் மனைவி கண்ணகி என்பவர், தனது குடும்பத்தினரோடு வசித்துவரும் நிலையில், தான் வளர்க்கும் பசு, கன்று ஈன்றக் கூடிய தருணத்தில் இருந்ததால், கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார். அதிகாலையில் மர்ம நபர்கள் 3 பேர் வீட்டினுள் நுழைந்து, கண்ணகி கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து கண்ணகி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, 3 பேரும் தப்பி ஓடினர். கிராம மக்கள் விடாது துரத்திச் சென்று பிடித்ததில், ஒருவர் மட்டும் பிடிபட்டுள்ளார்.
இதையடுத்து, வீதியில் உள்ள தெருவில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அவரைத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவினன்குடி போலீஸார், திருட முயன்றவரை மீட்க முயற்சித்தபோது, போலீஸாரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தப்பியோடிய மேலும் இருவரை பிடித்து வந்தால்தான், இவரை ஒப்படைப்போம் என கூறினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை மீட்டு சென்று விசாரித்ததில், நகை திருட முயன்ற நபர், ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்த முனியின் மகன் சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Source link