சென்னை: திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2021–22 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டது. அதில், ஒருவர், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியாக இருந்திருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. இதுபோன்ற தகுதியின் அடிப்படையில் திருநங்கைகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, விண்ணப்பித்தவர்கள் குறித்து ஆய்வு செய்த தமிழகஅரசு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா என்பரை சிறப்பு திருநங்கை விருதுக்காக தேர்வு செய்தது. இதற்கான விழா இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
அதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா அவர்களுக்கு சிறந்த திருநங்கை விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். . திருநங்கைகள் நலனுக்காக மர்லிமா சிறப்பாக சேவை புரிந்ததை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.