திருவனந்தபுரம்: திருமணம் செய்வதாக கூறி ஆலப்புழாவை சேர்ந்த பெண்ணிடமிருந்து 10 லட்சம் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் நைஜீரிய நாட்டு வாலிபரை டெல்லியில் வைத்து கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த 35 வயதான ஒரு பெண்ணுக்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த எனுகா அரின்சி இபென்னா (36) என்பவருடன் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். அமெரிக்காவில் பைலட்டாக இருப்பதாக எனுகா கூறியுள்ளார். அதை அந்த இளம்பெண்ணும் நம்பியுள்ளார். நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதற்கிடையே தன்னிடம் பெருமளவு பணம் இருப்பதாகவும் அதில் ஒன்றரை கோடி பணத்தை அனுப்பி வைப்பதாகவும் அந்தப் பெண்ணிடம் எனுகா கூறியுள்ளார். அதை அவரும் நம்பிவிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் இந்தியாவுக்கு கொண்டு வந்த பணத்தை டெல்லி விமானநிலையத்தில் பிடித்து வைத்துள்ளதாகவும், அதை மீட்க வேண்டுமென்றால் உடனடியாக 10 லட்சம் பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை நம்பிய அந்தப் பெண், எனுகாவுக்கு தன்னுடைய வங்கிக் கணக்கு மூலம் 10 லட்சம் பணத்தை அனுப்பி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அவரை தொடர்பு கொண்ட எனுகா, தனக்கு மேலும் 11 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பணத்தை அனுப்புவதற்காக அந்தப் பெண் ஆலப்புழாவில் உள்ள வங்கிக்கு சென்றார். இதில் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் உடனடியாக ஆலப்புழா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தான் மோசடி விவரம் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் எனுகா டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் குடும்பத்துடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆலப்புழா போலீசார் அங்கு விரைந்து சென்று எனுகாவை கைது செய்தனர். விசாரணையில் இவர் இதே போல பலரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இவ்வாறு கிடைக்கும் பணத்தை உடனடியாக நைஜீரியாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு இவர் மாற்றி வந்துள்ளார். எனுகாவை போலீசார் இன்று ஆலப்புழாவுக்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.