சென்னை: 10 வருவாய் வட்டங்களில் ரூ.50.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திருவோணம், வாணாபுரம் புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்குதல், 274 கிராம நிருவாக அலுவலர் பணியிடங்களை நிரப்புதல், நாகப்பட்டினம் நகராட்சி நம்பியார் நகரில் பேரிடர் மீட்பு மையம் அமைத்தல், உபகரணங்கள் கொள்முதல் செய்யவும், தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்திடவும் ரூ.10.51 கோடி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 21 முக்கிய அறிவிப்புகள்:
> புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிதாக திருவோணம் வருவாய் வட்டம் ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும்.
> புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தைச் சீரமைத்து புதிதாக திருவோணம் வருவாய் வட்டம் ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும்.
> சிறப்பு வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்ட) பணியிடங்கள் 4 வட்டங்களில் புதிதாக தோற்றுவிக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் மாதவரம் வட்டம், கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டம், கரூர் மாவட்டத்தில் கடவூர் வட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டம் ஆகிய வட்டங்களில் சிறப்பு வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பணியிடங்கள் ஆண்டொன்றுக்கு ரூ.1.11 கோடி செலவில் உருவாக்கப்படும்.
> மாவட்டங்களில் 274 கிராம நிருவாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
வருவாய் நிருவாகத்தின் அடிப்படை கிராம நிருவாகம் ஆகும். கிராம நிருவாக அலுவலர்கள், கிராம கணக்குகளை பராமரித்தல், கிராமத்திலுள்ள அரசு நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், வரிவசூல் செய்தல், பிறப்பு இறப்புகளை பதிவு செய்தல், சான்றிதழ்கள் பெற பரிந்துரை செய்தல், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல, போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இச்சேவைகள் மக்களை விரைந்து சென்றடைய மாவட்டங்களில் 274 கிராம நிருவாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
> பழுதடைந்த நிலையில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களுக்கு பதிலாக புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழகத்தில் வருவாய்த் துறையில் பழுதடைந்த நிலையில் இருக்கும் கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்களைக் கட்டித்தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 10 வருவாய் வட்டங்களில் புதிதாக வட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள் ரூ.50.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
> பழுதடைந்த நிலையில் உள்ள 50 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழகத்தில் வருவாய்த் துறையில் பழுதடைந்த நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு புதிதாக 50 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
> நாகப்பட்டினம் நகராட்சி நம்பியார் நகரில் பேரிடர் மீட்பு மையம் அமைக்கப்படும்.
பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சி நம்பியார் நகர் பகுதி பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, பேரிடர் மீட்பு மையத்தில் தங்க வைப்பதன் மூலம் பேரிடர் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகளை பெரிய அளவில் தவிர்க்க இயலும் என்பதால் நம்பியார் நகர் பகுதியில், ரூ.6 கோடி மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மையம் உருவாக்கப்படும்.
> மாவட்ட அவசர செயல்பாட்டு மையம் நவீனமயமாக்கப்படும்.
மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த 38 மாவட்டங்களில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.1.50 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும்.
> தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல்.
பேரிடர் காலங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையானது கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.2.41 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேதமடைவதிலிருந்து காப்பாற்றியுள்ளது. மேலும் 11,016 நபர்கள் பேரிடரிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறைந்த கால அளவில் விரைந்து மீட்பு பணியில் ஈடுபடும் வண்ணம் தீயணைப்புத் துறையின் திறனை வலுப்படுத்த தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் தண்ணீர் இறைப்பான்கள், அவசரகால மீட்பு வாகனம், சுவாசக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை கொள்முதல் செய்யவும் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்திடவும் ரூ.10.51 கோடி வழங்கப்படும்.
> தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் திறன்களை மேம்படுத்த மீட்பு வாகனங்கள் வாங்கப்படும்.
> பேரிடர் தொடர்பான பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை மையம், பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு தகுதி மையமாக தரம் உயர்த்தப்படும்.
> நிலச் சீர்திருத்த ஆணையரகத்தில் மின்னணு அலுவலக நடைமுறை மற்றும் இணையவழி சேவைகளை மேம்படுத்த கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு விரைந்து சேவைகள் அளித்திட நிலச் சீர்திருத்த ஆணையரகத்தில் மின்னணு அலுவலகப் பணி (e-office) மற்றும் இணையவழி சேவைகளை நடைமுறைப்படுத்திட கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் கொள்முதல்செய்திட ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
> நகர்ப்புற புலவரைபடம் (TSLR Sketch) இணையவழியில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்படும்.
> புவியியல் தகவல் அமைப்பு பிரிவு உருவாக்கப்படும்.
நில அளவைத் துறையில் அளவைப் பணிகள் மேற்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், கணினிபடுத்தப்பட்ட வரைபடங்களை பரிசீலித்து, மேம்படுத்தும் பொருட்டு சென்னை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்கத்தில் புவியியல் தகவல் அமைப்புப் பிரிவு ரூ.14.22 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
> புவியியல் தகவல் அமைப்பில் உள்ள முதுநிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
> நில அளவை இயக்குநரகம் மற்றும் 5 மாவட்ட நில அளவை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
> நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், நாரைக்கிணரு கிராமத்தில் அசல் நிலவரித்திட்டம் மேற்கொள்ளப்படும்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், நாரைக்கிணரு மலைக்கிராமத்தில் 2474 ஏக்கர் நிலத்தில் அசல் நிலவரித்திட்டம் நடைமுறைபடுத்தப்படும். இதன்மூலம் சுமார் 1500 குடும்பங்கள் பயனடையும் வகையில் பட்டா வழங்கப்படும்.
> கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியப்பகுதியைச் சுற்றியுள்ள விஜயமாநகரம் மற்றும் புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் அசல்நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
> நகர்ப்புறங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை விரைவுபடுத்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
நகர்ப்புற நில ஆவணங்களில் தரவுத்தளங்கள் புதுப்பிக்கப்பட்டு, நகர்ப்புறங்களில் குடிமக்களுக்கு இணையவழி பட்டா வழங்கிடும் வகையில் நகரம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வருவாய் பின் தொடர் பணிகளை விரைவுபடுத்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும்.
> தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் புன்னக்காயல் கிராமத்தில் அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வகைபாடு மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும்.
> விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், நரசிங்கராயன்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வகைபாடு மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும்.