திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்கு சென்று திரும்பிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவரை கடந்த 15-ந் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
சுபைர் கொலைஏற்கனவே அந்த பகுதியில் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடந்தது என்று சுபைரின் உறவினர்கள் கூறினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலக்காடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் சீனிவாசன் என்பவரை அவர் வேலை செய்த கடைக்குள் புகுந்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
பாலக்காட்டில் அடுத்தடுத்து நடந்த தொடர் கொலைகளால் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவியது. இதையடுத்து போலீசார் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வாரம் முழுவதும் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
இதற்கிடையே பாலக்காட்டில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி பினராய் விஜயன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
முதல் மந்திரி பினராய் விஜயன் உத்தரவை தொடர்ந்து பாலக்காட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அங்கு பதட்டத்தை தணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இன்று மாலை மின்சார துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இக்கூட்டத்தால் எந்த பலனும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறியுள்ளனர்.