சென்னை:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தினத்தந்தி என்னும் ஆலமரத்தை வளர்த்து, அகிலம் புகழ பரப்பிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் அருமை புதல்வர்களில் ஒருவர் அன்பு இளவல் சிவந்தியார் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளிலே அவரது, சரித்திர சாதனைகளைச் சற்று சிந்திப்பதே அவருக்குநாம் செய்யும் சிறந்த மலர் அஞ்சலியாகும்.
இளையபுதல்வரான சிவந்தியார் அவர்களுக்கு தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள் சிறந்த கல்வியை தந்தார். பள்ளி, கல்லூரி முடிந்த நிலையில், சிவந்தியார் தன்னுடைய தந்தையின் முன் நின்றார். செல்வசீமான் வீட்டுபிள்ளையாக பிறந்து வளர்ந்தாலும் தன் மகன், தான் கை கொள்ளுகிற தொழிலை தொடக்கநிலையில் இருந்து அதன் எல்லா நிலைகளிலும் பயின்று முழுமை பெற வேண்டும் என்று நினைத்தார் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள்.
அதனால் தினத்தந்தியின் அச்சு கூடத்தின் போர்மேனை வரவழைத்து அவரிடம் கூறினார். இந்த பிள்ளைக்கு உங்களை போல் சீருடையை கொடுக்க வேண்டும். சாதாரண ஒரு தொழிலாளியை எப்படி வேலை வாங்க வேண்டுமோ அப்படி இவரை வேலை வாங்க வேண்டும்.முதலாளியின் மகன் என்று கருணை காட்ட கூடாது என்று கூறி சிவந்தியாரை போர்மேன் உடன் அனுப்பி வைத்தார்.
போர்மேன் உடன் சென்ற சிவந்தியார் அச்சு கோர்ப்பது முதல் இயந்திரங்கள் இயக்குவது வரை நன்கு கற்றுக் கொண்டார். தொடக்க நிலை பயிற்சி முடிந்த பிறகு, தினத்தந்தி அச்சிடும் பகுதிக்கு சென்று அந்த துறையிலும் முழுமையாக கற்றுக் கொண்டார் சிவந்தியார் அவர்கள். அதன் பிறகு அவருக்கு புரோமோஷன் தருவது போல் அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
இப்படியாக சிவந்தி அய்யா அவர்கள் தினத்தந்தியின் எல்லா நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படிப்படியாக தன் நிலையை உயர்த்திக்கொண்டார். இவ்வாறு தினத்தந்தி அதிபர் சி.பா.ஆதித்தனார் அவர்கள், தன் மகன் தினத்தந்தியின் எல்லா பிரிவுகளிலும் கற்றுணர்ந்து முழுமை பெற்றதை அறிந்து மனம்மிக மகிழ்ந்தார். தன்னுடைய எல்லா வேலைகளிலும் சிவந்தியாரை பயன்படுத்தினார்.
தமிழர் தந்தை மறைவுக்கு பின்பு தினத்தந்தி நாளிதழை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியாக அலுவலகம் அமைத்து தினத்தந்தி பத்திரிகையை பெருகச் செய்தார். மேலும், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
இவர் விளையாட்டுத் துறையில் அதிகம் பற்றுக் கொண்டவர். தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்ற விளையாட்டுத் துறைக்கு தலைவராக அமர்த்தப்பட்டார். அதன் காரணமாக விளையாட்டுத்துறை அதாவது தமிழ் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொள்ளும் படி உயர்வுக்கு கொண்டு வந்தார்.
சிவந்தி ஆதித்தனார்அவர்கள் எங்கள் வி.ஜி.பி. குடும்பத்தின் மீதும் பற்றும், பாசமும் கொண்டு இருந்தார். என்னுடைய 75-வது பிறந்ததின விழாவிற்கு வந்து வாழ்த்து கூறினார் சிவந்தியார் அவர்கள், என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)
என்ற குறளுக்கு ஏற்ப இலக்கணமாகவும், இலக்கியமாகவும் திகழ்ந்து தமிழர்தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு பேரும், புகழும் சேர்த்து புகழுடன் வாழ்ந்து வந்தார்.
சிவந்தியார் அவர்கள் வலிமை மிக்க ஒரு வாலிபனாகவும், தன் தந்தையை போல் தொலைநோக்கு பார்வையிலும் வெற்றி கண்டவர். அய்யா அவர்கள் தினத்தந்தி வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டதை எவரும் மறக்க முடியாது. அவருடைய நினைவு நாளில் அவருடைய சாதனைகளை நினைத்துப் பார்ப்பதுநாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.