தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த
தமிழிசை
சவுந்தரராஜன், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதை அடுத்து, தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அன்று முதல் இன்னாள் வரை, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகிய இரண்டு பதவிகளை, தமிழிசை சவுந்தரராஜன் கவனித்து வருகிறார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக செயல்பட்டாலும், ஆளும்
பாஜக
கூட்டணி அரசுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவுக்கும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே முட்டல் – மோதல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இரண்டு மாநிலங்களின் ஆளுநர் பதவிகளை கவனித்து வருவதால், தமிழிசை சவுந்தரராஜனுக்கு வேலைப்பளுவும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பிலிருந்து தமிழிசை சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டு, கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரிடம் கூடுதல் பொறுப்பாக இருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிக்கு, கர்நாடக மாநில பாஜக துணைத் தலைவர் நிர்மல் குமார் சுரானா நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகவே, தலைநகர் டெல்லிக்கு, தமிழிசை சவுந்தரராஜன் அவசர அவசரமாக சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை அல்லது இரவு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அவர் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு, வரும் நாட்களில் ஆளுநர் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.