பிரதமர் மோடி 24-ந்தேதி காஷ்மீர் பயணம்

ஜம்மு :

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி கிராமத்தில் சிறப்பு விழா நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். ஜம்மு விமான நிலையத்தில் இருந்து நேராக பாலி கிராமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கே 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

இதில் நாடு முழுவதிலும் இருந்து 700 பஞ்சாயத்துகளின் உறுப்பினர்களும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர்.

காஷ்மீரின் குளிர்கால தலைநகர் ஜம்முவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பாலி கிராமம் காஷ்மீரின் முதலாவது கார்பன் இல்லா சோலார் பஞ்சாயத்து என்ற நிலையை எட்ட உள்ளது.

பசுமை சாலைகள், எலக்ட்ரிக் பஸ்கள், புனரமைக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடம், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்கள் என முன்மாதிரி பஞ்சாயத்தாக பாலி பஞ்சாயத்து திகழ்கிறது.

பஞ்சாயத்துக்கு உட்பட்ட 340 வீடுகளுக்கு பசுமை மின்சாரம் வழங்குவதற்காக 500 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் மின் நிலையம் 6,408 சதுர கி.மீ. பரப்பளவில் தயாராகி வருகிறது.

ரூ.2.75 கோடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த மின்நிலைய பணிகளை 25 பேர் கொண்ட குழு ஒன்று இரவு-பகலாக அமைத்து வருகிறது.

இந்த மின் நிலையத்தை 24-ந்தேதி பிரதமர் மோடி முறைப்படி திறந்து வைக்கிறார்.

இதைத்தவிர ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதுடன், 2 மின் திட்டங்கள் உள்பட சில வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல்லும் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் வருகை பாலி கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. அவரை சிறப்பாக வரவேற்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து பண்டிகுமார் என்ற உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், ‘தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு எங்கள் கிராமத்தை பிரதமர் தேர்வு செய்திருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த கிராமத்தில் ஏராளமான பணிகள் நடந்துள்ளன. அனைத்து துறை அதிகாரிகளும் இங்கு முகாமிட்டோ அல்லது தினந்தோறும் வருகை தந்தோ பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபின், அங்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அரசுமுறை பயணம் இதுவாகும்.

அதேநேரம், ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக 2019 அக்டோபர் மற்றும் 2021 நவம்பர் மாதங்களில் அவர் காஷ்மீர் எல்லைக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அண்டை மாவட்டமான கதுவாவில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சி.கோட்வால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காஷ்மீரின் எல்லைப்பகுதிகள், தேசிய நெடுஞ்சாலைகள், நகர்ப்புற கட்டமைப்புகள் அனைத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் ரோந்துப்பணி, மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை போன்றவற்றை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.