புதுடில்லி : குழாய் வாயிலாக, ‘காஸ்’ வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு புதிதாக ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இவற்றின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ போன்ற எரிபொருளுக்குமாற்றாகவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு நிறைந்த எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.ஒப்புதல்எல்.என்.ஜி.,யில் இருந்து தயாரிக்கப்படும் பி.என்.ஜி., எனப்படும் வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு சமையல் காஸ் வினியோக திட்டம் டில்லி, மும்பை உட்பட நாட்டின் பல நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.மேலும், வாகனங்களில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, எல்.என்.ஜி.,யில் இருந்து தயாரிக்கப்படும் சி.என்.ஜி., எனப்படும் திரவ இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வினியோகஸ்தர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீட்டை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆனாலும், இவற்றை வினியோகிக்கும் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு, 2021 மார்ச் மாதத்துக்குப் பின் உயர்த்தப்படவில்லை என, கூறப்படுகிறது.ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, தேவையைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
கூடுதல் முதலீடு
தற்போது பல்வேறு நகரங்களில், குழாய் வாயிலாக காஸ் வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி தேவை அதிகரித்துள்ள போதிலும், ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை என, கூறப்படுகிறது.இதனால் தட்டுப்பாட்டை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை, வினியோக நிறுவனங்கள் வாங்கி வருகின்றன.இவற்றின் விலை கடந்த சில மாதங்களில் மட்டும், 110 மடங்கு உயர்ந்துள்ளது.
உள்நாட்டில் அரசு நிறுவனங்கள் வழங்கும் விலையைவிட சர்வதேச சந்தையில் விலை, ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.இதனால் இந்த வினியோக நிறுவனங்கள், சி.என்.ஜி.,யின் விலையை 60 சதவீதம் வரை, அதாவது ஒரு கிலோவுக்கு, 6.10 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. அதுபோல சமையல் காஸ் விலை, 33 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்தத் துறையில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதற்கு இந்த நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.
தற்போது ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் முதலீடு செய்வதை நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.மேலும், சி.என்.ஜி., மற்றும் சமையல் கேஸ் விலையை உயர்த்தவும் வினியோக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.பெட்ரோல், டீசலுக்கு இணையாக, சி.என்.ஜி.,யின் விலையும் நெருங்கிவிட்டதால், அதற்கு மாறுவதற்கு வாகனஓட்டுகள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.