இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டேவை மத்திய அரசு இன்று நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பு வகித்த விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது பதவிக்கு ராணுவத் தளபதியாக இருக்கும் எம்.எம். நரவனேவை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எம்.எம். நரவனேவின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, புதிய ராணுவத் தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எம்.எம். நரவனே ஓய்வுபெற்ற பிறகு மனோஜ் பாண்டே முறைப்படி ராணுவத் தளபதியாக பதவியேற்பார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பு வகித்து வந்தார். அதற்கு முன்பாக, இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் – நிகோபார் கமாண்டராக அவர் பணியாற்றி வந்தார்.
ஆரம்பக் காலக்கட்டத்தில், இந்திய ராணுவத்தில் பொறியாளராக மனோஜ் பாண்டே பணியாற்றி வந்துள்ளார். பொறியாளர் பிரிவில் பணிபுரிந்த ஒருவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM